அரியலூர்: சேனாபதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிட திறப்பு விழா நடந்தது. அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே, சேனாபதி கிராமத்தில் உள்ள பஞ்.,யூனியன் நடுநிலைப்பள்ளிக்கு, அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் 9.75 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மூன்று வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிட திறப்பு விழாவுக்கு, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட சி.இ.ஓ., கார்த்தியாயினி முன்னிலை வகித்தார். கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்து தலைவி ராஜேஸ்வரி ராமச்சந்திரன் வரவேற்றார்.
புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றிய, கலெக்டர் பொன்னுசாமி பேசியதாவது: இந்த புதிய பள்ளி கட்டிடம் கட்ட, இந்த கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்ற விவசாயி தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளார். பணம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் நபர்கள் அதிகம் உள்ள இந்த காலகட்டத்தில், இதுபோன்ற பரந்த மனப்பான்மை கொண்ட நல்ல மனிதர்கள் சிலரும் உள்ளனர். அத்தகைய கொடை உள்ளம் கொண்ட ஏழை விவசாயி ராமசாமியை மிகவும் பாராட்டுகிறேன்.
கிராமப்பகுதி பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ., மூலம் பல்வேறு ஊர்களிலும் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டாலும், தேர்ச்சி விகிதம் என்பது வேதனைப்பட வைக்கிறது. நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சராசரியாக 20 முதல் 25 சதவீதம் மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்ச்சி விகித அளவுக்கு மார்க் வாங்கியுள்ளனர்.
இதே நிலை நீடித்தால் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும், மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நான் எச்சரிக்கை விடுத்துள்ளேன். நமது மாவட்டத்தில் அனைவரும் படித்து உயர் பதவிக்கு வர வேண்டும் என்ற எனது விருப்பத்தை, வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். எம்.எல்.ஏ., கோரிக்கைபடி, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ், இந்த பள்ளிக்கான சாலை மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
முன்னதாக விழாவுக்கு தலைமை வகித்த எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி பேசியதாவது: சமச்சீர் கல்வி, அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட கல்வி மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஆண்டு தோறும் பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்கிறது. மேலும் உயர் கல்விக்கான கல்வி கடன், இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், இலவச புத்தகம், சீருடை, மதிய உணவு, சத்துணவுடன் முட்டை உள்ளிட்ட கல்வி மேம்பாட்டு பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆரம்ப கல்வி சிறப்பாக அமைந்து விட்டால், மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி தரமாக அமையும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது.
கிராம பகுதி மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் தான் இப்போது தரமான கல்வியை வழங்குகிறது. வேறு எப்போதும் இல்லாத வகையில் திருமானூரில் ஒன்றரை கோடி ரூபாயில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், கீழக்காவட்டாங்குறிச்சியில் ஒரு கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த கிராமத்துக்கு கூடுதல் பஸ் வசதி, விரைவில் கொள்ளிடம் குடிநீர் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பாளை அமரமூர்த்தி பேசினார்.
விழாவில், அரியலூர் தாசில்தார் கோவிந்தராஜூலு, திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மதியழகன், சித்ரா, மாவட்ட பஞ்.,கவுன்சிலர் வக்கீல் பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் திராவிடமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரைராஜ் நன்றி கூறினார்


0 comments:
Post a Comment