Pages

Monday, April 18, 2011

தொகுதி விவரம்: அரியலூர்

தொகுதி விவரம்: அரியலூர்  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறியதால் கனிம வளம் பெற்றுள்ள பூமி. தமிழ்நாட்டிலேயே சிமெண்ட் உற்பத்தியில் முதலிடத்தைப் பிடித்து ஏழு மிகப்பெரிய தொழிற்சாலைகளும் உள்ளன. சின்ன திருப்பதி என்று கிராம மக்களால் அழைககப்படும் அரியலூர் அருள்மிகு கலியுக வரதராஜபெருமாள் ஆலயம், தேவாரமி மூவராலும் பாடல் பெற்ற திருமழபாடி ஸ்ரீ வைத்தியநாதசுவாமி ஆலயம், வீராமமுனிவரால் உருவாக்கப்பெற்ற புகழ்பெற்ற ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆகியவை பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் இந்த தொகுதியில் உள்ளன. வேட்டக்குடி பறவைகள் சரனாலயம் சுற்றுலா தலமாக உருவெடுத்து வருகிறது. மருதையாற்றில் ஏற்ப்பட்ட விபத்து மற்றும் நாச வேலை காரணமாக இருமுறை இந்திய அளவில் பரபரப்பு ஏற்படுத்திய தொகுதி.

 

தமிழ்தீவிரவாதிகளால் ஒருகாலத்தில் அச்சுருத்தல்கள் ஏற்பட்டு இன்று அமைதியாக உற்பத்தியில் கவனம் செலுத்தும் மாவட்டம். அரியலூர் சட்டமன்ற தொகுதி, அரியலூர், திருமானூர் என இரண்டு முழுஊராட்சி ஒன்றியங்களும், ஜெயங்கொண்டம், தா.பழூர் என இருஊராட்சிகளில் 20 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. இதில் பெண் வாக்காளர்களே அதிகம் உளளனர், இத்தேர்தலில் 1,06,821 ஆண் வாக்காளர்களும் , 1,08,648 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,15,469பேர் வாக்காளர்களாக உள்ளனர், இச்சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குசாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பதட்டம் நிறைந்தவை, அதிகம் பதட்டம் ஏற்படுத்தக்கூடியவை, அரசியல் மோதலினால் பதட்டம் ஏற்ப்படுத்தக்கூடியவை என 18வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு பாதுகாப்பு ஏற்ப்படுகள் செய்யப்பட்டுள்ளன, தி.மு.க - அ.தி.மு.க ஆகியவற்றின் கோட்டை என்ற அழைக்கப்படும், இச்சட்டமன்றத் தொகுதியில் 1957 ஆம் வருடத் தேர்தலில் இருந்து இதுவரை தி.மு.க 5 முறையும், அ.தி.மு.க 3 முறையும், காங்கிரஸ் 4 முறையும் ( தா.ம.க 1 முறை ) வெற்றி பெற்றுள்ளன.

 

இத் தொகுதியில் வன்னியர் 27% உடையார் 24% மூப்பனார் 16% தாழ்த்தப்பட்டோர் 22% மற்றும் இதர வகுப்பினர் தலா 11% சதவீதமும் வாக்காளர்களாக உள்ளனர், தொகுதி சிரமைப்பிற்கு முன்னர் மூப்பனார், உடையார் சமூகத்தினர் அதிகம் இருந்ததால் போட்டியிடும் எதிரெதிர் வேட்பாளர்களாகவும், வெற்றி பெறுபவர்கள் இவர்களின் ஒரு சமூத்தினராகவே இருந்தனர். இந்நிலையில் தற்போது மறுசீரமைப்பால் வன்னியர்கள் அதிக சதவீதத்தில் உள்ளனர். முக்கிய கோரிக்கைகள் திருமானூர் டெல்டா பாசன விவசாயிகளின் நலன் காக்க நவீன அரிசி ஆலை உருவாக்க வேண்டும். 1959 -ல் தொடங்கப்பட்ட புள்ளம்பாடி வாய்க்கால், மதகுகள் சீர்படுத்தப்பட்டு செப்பனிட வேண்டும். வழியில் உள்ள குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட வேண்டும். பச்சை மலையில் உருவாகி சிறுவாச்சுரில் தொடங்கி வரும் மருதையாற்று நீர் கொள்ளிடத்திற்கு சென்று வீணாகிறது. இதன் குறுக்கே தடுப்பணை` கட்டி நீரை பறவைகள் சரணாலயமான கரைவெட்டி ஏரிக்கு கொண்டு செல்ல வேண்டும்.

 

அரசு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்த வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் பல மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு கூட்டுத் குடிநீர்த் திட்டங்களுக்கு ஆழ்கிணறு அமைத்து நீர் எடுத்து செல்லப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய வீராணம் விரிவாக்கத் திட்டத்தின் போது அறிவிக்கப்பட்ட கொள்ளிடம் ஆற்றில் தடுப்பாணைகள் கட்டி நீர்சேகரிப்பை உருவாக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகள் ஆகும். மேலும் பால் உற்பத்தியில் தன்னிறைவுப் பெற்ற இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பாலை சேமித்து வைக்க விளாங்குடியில் அறிவிக்கப்பட்ட பால் குளிருட்டும் நிலையத்தை உடனே தொடங்க வேண்டும், கொள்ளிடக்கரையை பலப்படுத்தி வாகனங்கள் செல்லும் அளவிற்கு அகலப்படுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

2011-வாக்குப்பதிவு சதவீதம் :68% மாவட்டம் :அரியலூர் மொத்த வாக்காளர்கள்:215469 ஆண் வாக்காளர்கள் :106831 பெண் வாக்காளர்கள் :108638 திருநங்கை வாக்காளர்கள்:0

 

Nandri : malaimalar.com

 

Wednesday, April 13, 2011

அரியலூர் மாவட்டத்தில் பாளை து. அமரமூர்த்தி வாக்குப் பதிவு

அரியலூர் மாவட்டத்தில் தொல். திருமாவளவன், வேட்பாளர்கள், ஆட்சியர் வாக்குப் பதிவு

 

அரியலூர், ஏப்.13: அரியலூர் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வேட்பாளர்கள், ஆட்சியர் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

 

அரியலூர் வாலாஜாநகரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி முதல் வாக்கைப் பதிவு செய்து வாக்குப் பதிவைத் தொடக்கி வைத்தார்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நஜ்முல் ஹோதா அரியலூர் ஆர்.சி. செயின்ட் மேரீஸ் பள்ளியிலும் வாக்களித்தனர்.

 

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பாளை து. அமரமூர்த்தி தனது சொந்த கிராமமான திருமானூர் ஒன்றியம், பாளையப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், அதிமுக வேட்பாளர் துரை. மணிவேல் இலந்தைக்கூடம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பாஜக வேட்பாளர் பி. அபிராமி கீழக்கொளத்தூர் அரசுப் பள்ளியிலும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சி. பாஸ்கர் தனது சொந்த ஊரான தேளூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார்.

 

இதுபோல, ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளர் காடுவெட்டி ஜெ. குரு தனது சொந்த ஊரான ஆண்டிமடம் அருகிலுள்ள ப. காடுவெட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், அதிமுக வேட்பாளர் ப. இளவழகன் திருமானூர் ஒன்றியம், அன்னிமங்கலம் பள்ளியிலும், பாஜக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர்.

 

Tuesday, April 12, 2011

அரியலூர், ஜயங்கொண்டத்தில் பிரசாரம் நிறைவு

அரியலூர், ஜயங்கொண்டத்தில் பிரசாரம் நிறைவு

 

அரியலூர், ஏப். 11: அரியலூர், ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

 

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பாளை து. அமரமூர்த்தியை ஆதரித்தும், ஜயங்கொண்டம் பாமக வேட்பாளர் ஜெ. குருவை ஆதரித்தும் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.

 

அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளர் துரை. மணிவேலை ஆதரித்து அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பெரம்பலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டும் அரியலூரில் பிரசாரம் செய்தார். மற்ற தலைவர்கள் யாரும் அரியலூர் வரவில்லை. ஜயங்கொண்டம் பகுதிக்கு அதிமுக, தேமுதிக முக்கியத் தலைவர்கள் யாரும் பிரசாரம் செய்ய செல்லவில்லை.

 

இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் அந்தக் கட்சியிóன் நிறுவனர் பச்சமுத்து 2 முறை அரியலூர் வந்து பிரசாரம் செய்தார்.

 

நிறைவு நாள் பிரசாரம்: அரியலூர் காங்கிரஸ் வேட்பாளர் பாளை அமரமூர்த்தி திங்கள்கிழமை தா. பழூர் ஒன்றியத்தில் உள்ள காட்டுப்புத்தூர், சாத்தம்பாடி, காசாங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

 

அதிமுக வேட்பாளர் துரை. மணிவேல் திருமானூர் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். செம்பியக்குடியில் இரு சக்கரன வாகன ஊர்வலம் புறப்பட்டு பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்று திருமானூரில் முடிவடைந்தது. அரியலூர் நகரம் சார்பில் இரு சக்கர வாகனப் பேரணி மற்றும் ஊர்வலமாகச் சென்று வாக்குகளை அதிமுக, தேமுதிகவினர் சேகரித்தனர்.

 

ஜயங்கொண்டம் தொகுதி பாமக வேட்பாளர் ஜெ. குரு திங்கள்கிழமை ஜயங்கொண்டம் கடைவீதிகளிலும், சந்தைப்பேட்டையிலும் வாக்கு சேகரித்து, காந்தி சிலை முன்பு பிரசாரத்தை நிறைவு செய்தார்.    இதுபோல, அதிமுக வேட்பாளர் ப. இளவழகன் ஜயங்கொண்டம் கடைவீதிகளில் பிரசாரம் செய்து நிறைவாக நான்குரோட்டில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

Tuesday, April 5, 2011

அரியலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அரியலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

 

அரியலூர், ஏப். 4: அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தா. பழூர் ஒன்றியப் பகுதிகளில் அரியலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பாளை து. அமரமூர்த்தி திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

தா.பழூர் ஒன்றியம், காசாங்கோட்டை காலனி, புதுப்பாளையம், திருபுரந்தான், அணைக்குடி, அரங்கோட்டை, கீழகோவிந்தபுத்தூர் காலனி, கீழகோவிந்தபுத்தூர், குமணந்துறை, மேலகோவிந்தபுத்தூர், சாத்தம்பாடி, முத்துவாஞ்சேரி அண்ணாநகர், காலனி, முத்துவாஞ்சேரி, குஞ்சுவெளி, குணமங்கலம் காலனி, குணமங்கலம், அறக்கட்டளை, கடம்பூர், கடம்பூர் காலனி, கோவில்சீமை, காலனி, மழவராயநல்லூர், மழவராயநல்லூர் வடக்கு, உடையவர் தீயனூர், அம்பலவர் கட்டளை, முஸ்லிம் தெரு, அம்பலவர் கட்டளை, காங்கேயன்பேட்டை செங்குழி காலனி, பெருமாள் தீயனூர், செங்குழி, விக்கிரமங்கலம், கீழநத்தம், ஆலவாய், அம்பாப்பூர் காலனி ஆகிய கிராமங்களில் அவர் வாக்கு சேகரித்தார்.

 

கட்சியின் வட்டாரத் தலைவர்கள் மா. நடராஜன், வீர. ரவி. மாவட்டப் பொதுச் செயலர் பழனிச்சாமி, திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Sunday, April 3, 2011

அரியலூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப் பாடுபடுவேன்: காங்கிரஸ் வேட்பாளர் வாக்குறுதி

அரியலூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப் பாடுபடுவேன்: காங்கிரஸ் வேட்பாளர் வாக்குறுதி

 

 

அரியலூர், மார்ச் 31: அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க பாடுபடுவேன் என்றார் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பாளை து. அமரமூர்த்தி(படம்). இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதியில் கூறியிருப்பது:

 

அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினராக 2006-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், இந்தத் தொகுதியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளேன். அரியலூரைத் தலைமையிடமாகக் கொண்டு மீண்டும் அரியலூர் மாவட்டம் பெற்றுத் தந்தது, புதிய அரசுப் பொறியியல் கல்லூரி, ரூ. 10 கோடியில் நகரப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புறவழிச் சாலை, அரியலூர் பேருந்து நிலையத்தில் ரூ. 1 கோடியில் புதிய சிமென்ட் தளம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டால், வரும் காலங்களிலும் மேலும் பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றித் தருவேன்.

 

அதன்படி, அரியலூர் மாவட்டத்துக்கு புதிய மருத்துவக் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் இன மாணவிகளுக்கு விடுதி அமைத்துத் தருவேன்.

 

இந்தத் தொகுதியில் விளையும் தானியங்கள் கெடாமல் இருக்க குளிர் சாதன கிடங்கு, கொள்ளிடம் ஆற்றிலும், மருதையாற்றிலும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுப்பேன்.

 

அரியலூர் நகராட்சியில் சிறப்புச் சாலை பணிகள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசு விளையாட்டுப் பள்ளி விடுதி, காந்தி மார்க்கெட் உள் பகுதியில் சிமென்ட் தளம், நெடுஞ்சாலைத் துறை மூலம் பயணியர் விடுதி அமைக்க பாடுபடுவேன். இதுபோல, பொதுமக்கள் நலன் கருதி, சுண்டக்குடியில் மருதையாற்று மேம்பாலம், அரியலூரில் இணை, துணை மருத்துவ இயக்குநர் அலுவலகங்கள், வேளாண் இணை இயக்குநர், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகங்கள் இயங்க உரிய நடவடிக்கை எடுப்பேன். மேலும், அரியலூர் தொகுதியில் அரசுக் கல்வியியல் கல்லூரி அமைக்கவும், தா.பழூர் பகுதியில் அரசுக் கலைக் கல்லூரி தொடங்கவும் நடவடிக்கை எடுப்பேன். திருமழப்பாடியில் ஆரம்ப சுகாதார நிலையம அமைக்கவும், அரியலூர் சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தவும், கீழப்பழூரில் தொழில்பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார் அவர்.