Pages

Thursday, March 17, 2011

திருமழபாடியில் நந்தியெம்பெருமான் திருமணம்

திருமழபாடியில் நந்தியெம்பெருமான் திருமணம்

 

அரியலூர்: திருமழபாடியில் நந்தியெம்பெருமானுக்கு கோலாகல திருமணம் நடந்தது.ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம், ஸ்ரீ சீதா-ராமர் திருமணம் உள்பட பல தெய்வ திருமணங்களை போல உலகெங்கும் உள்ள சிவாலயங்களில், சிவபெருமானுக்கு காவலனாகவும், தோழனாகவும் விளங்கும் நந்தியெம்பெருமானுக்கு, அரியலூர் மாவட்டம், திருமழபாடி கொள்ளிடக்கரையில் உள்ள வைத்தியநாதஸ்வாமி கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரத்தன்று திருமண உற்சவம் நடக்கிறது.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள அந்தணர் குறிச்சி கிராமத்தில் வயலில் உழுத போது கிடைக்கப்பெற்றவர் நந்தியெம்பெருமான். தொடர்ந்து திருவையாறு ஐயாரப்பர் கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டு, அங்கிருந்து அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாரப்பருடன் கடந்த 15ம் தேதி காலையில், பெண் வீடான திருமழபாடிக்கு புறப்பட்ட நந்தியெம்பெருமான், வெள்ளி தலைப்பாகையுடன் குதிரை வாகனத்தில் அமர்ந்து, திருநெய்தானம், கடுவெளிப்பனையூர், வைத்தியநாதன் பேட்டை வழியாக வந்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கினார். அதே நேரத்தில் திருமழபாடியிலிருந்து சுந்தராம்பிகை உடனமர் வைத்தியநாதஸ்வாமி, கண்ணாடி பல்லக்கில் சென்று சம்பந்திகளையும், மணமகனையும் வரவேற்றனர்.நேற்று முன்தினம் இரவு திருமழபாடி கோயில் வளாகத்தில் மனிதகுல சம்பிரதாயப்படி திருமண நிகழ்ச்சி துவங்கியது. நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பிறகு சீர்வரிசையுடன், கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமண மேடைக்கு, மணப்பெண் அழைத்து வரப்பட்டார்.

 

வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் புதல்வியுமான சுயஸாம்பிகா தேவிக்கும், சிலாத முனிவரின் புதல்வரான நந்தியெம்பெருமானுக்கும், ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை மற்றும் யாக வேள்வியுடன் துவங்கி, மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட திருவையாறு ஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, கோயில் ஸ்தானிகர் வீட்டு பெண் ஜானகி, மணமகளுக்கு நாத்தி முடிச்சு திருமண உற்சவத்தை நிறைவு செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பலரும், நமச்சிவாய வாழ்க, தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என கோஷமிட்டனர். உலகில் வேறு எங்கும் காணமுடியாத விழாவாக, பக்தி சிரத்தையுடன் நடந்த இத்திருமண விழாவில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கோவை ராதாகிருஷ்ணன், அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி, ஆர்.டி.ஓ., ஸ்ரீதரன், ஹிந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர்கள் திருச்சி பாலசுப்ரமணியன், தஞ்சாவூர் லெட்சுமணன், உதவி ஆணையர் அரியலூர் சித்ரா, கோயில் நிர்வாக அலுவலர் முருகேஷ், நிர்வாகி முருகேசன், பக்த பிரமுகர் சிவானந்தம் பிள்ளை, வக்கீல் கண்டிராதித்தம் விஸ்வநாதன் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த பொதுமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment