அரியலூர், ஜயங்கொண்டத்தில் பிரசாரம் நிறைவு
அரியலூர், ஏப். 11: அரியலூர், ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பாளை து. அமரமூர்த்தியை ஆதரித்தும், ஜயங்கொண்டம் பாமக வேட்பாளர் ஜெ. குருவை ஆதரித்தும் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளர் துரை. மணிவேலை ஆதரித்து அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பெரம்பலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டும் அரியலூரில் பிரசாரம் செய்தார். மற்ற தலைவர்கள் யாரும் அரியலூர் வரவில்லை. ஜயங்கொண்டம் பகுதிக்கு அதிமுக, தேமுதிக முக்கியத் தலைவர்கள் யாரும் பிரசாரம் செய்ய செல்லவில்லை.
இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் அந்தக் கட்சியிóன் நிறுவனர் பச்சமுத்து 2 முறை அரியலூர் வந்து பிரசாரம் செய்தார்.
நிறைவு நாள் பிரசாரம்: அரியலூர் காங்கிரஸ் வேட்பாளர் பாளை அமரமூர்த்தி திங்கள்கிழமை தா. பழூர் ஒன்றியத்தில் உள்ள காட்டுப்புத்தூர், சாத்தம்பாடி, காசாங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
அதிமுக வேட்பாளர் துரை. மணிவேல் திருமானூர் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். செம்பியக்குடியில் இரு சக்கரன வாகன ஊர்வலம் புறப்பட்டு பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்று திருமானூரில் முடிவடைந்தது. அரியலூர் நகரம் சார்பில் இரு சக்கர வாகனப் பேரணி மற்றும் ஊர்வலமாகச் சென்று வாக்குகளை அதிமுக, தேமுதிகவினர் சேகரித்தனர்.
ஜயங்கொண்டம் தொகுதி பாமக வேட்பாளர் ஜெ. குரு திங்கள்கிழமை ஜயங்கொண்டம் கடைவீதிகளிலும், சந்தைப்பேட்டையிலும் வாக்கு சேகரித்து, காந்தி சிலை முன்பு பிரசாரத்தை நிறைவு செய்தார். இதுபோல, அதிமுக வேட்பாளர் ப. இளவழகன் ஜயங்கொண்டம் கடைவீதிகளில் பிரசாரம் செய்து நிறைவாக நான்குரோட்டில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

0 comments:
Post a Comment