Pages

Sunday, April 3, 2011

அரியலூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப் பாடுபடுவேன்: காங்கிரஸ் வேட்பாளர் வாக்குறுதி

அரியலூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப் பாடுபடுவேன்: காங்கிரஸ் வேட்பாளர் வாக்குறுதி

 

 

அரியலூர், மார்ச் 31: அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க பாடுபடுவேன் என்றார் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பாளை து. அமரமூர்த்தி(படம்). இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதியில் கூறியிருப்பது:

 

அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினராக 2006-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், இந்தத் தொகுதியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளேன். அரியலூரைத் தலைமையிடமாகக் கொண்டு மீண்டும் அரியலூர் மாவட்டம் பெற்றுத் தந்தது, புதிய அரசுப் பொறியியல் கல்லூரி, ரூ. 10 கோடியில் நகரப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புறவழிச் சாலை, அரியலூர் பேருந்து நிலையத்தில் ரூ. 1 கோடியில் புதிய சிமென்ட் தளம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டால், வரும் காலங்களிலும் மேலும் பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றித் தருவேன்.

 

அதன்படி, அரியலூர் மாவட்டத்துக்கு புதிய மருத்துவக் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் இன மாணவிகளுக்கு விடுதி அமைத்துத் தருவேன்.

 

இந்தத் தொகுதியில் விளையும் தானியங்கள் கெடாமல் இருக்க குளிர் சாதன கிடங்கு, கொள்ளிடம் ஆற்றிலும், மருதையாற்றிலும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுப்பேன்.

 

அரியலூர் நகராட்சியில் சிறப்புச் சாலை பணிகள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசு விளையாட்டுப் பள்ளி விடுதி, காந்தி மார்க்கெட் உள் பகுதியில் சிமென்ட் தளம், நெடுஞ்சாலைத் துறை மூலம் பயணியர் விடுதி அமைக்க பாடுபடுவேன். இதுபோல, பொதுமக்கள் நலன் கருதி, சுண்டக்குடியில் மருதையாற்று மேம்பாலம், அரியலூரில் இணை, துணை மருத்துவ இயக்குநர் அலுவலகங்கள், வேளாண் இணை இயக்குநர், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகங்கள் இயங்க உரிய நடவடிக்கை எடுப்பேன். மேலும், அரியலூர் தொகுதியில் அரசுக் கல்வியியல் கல்லூரி அமைக்கவும், தா.பழூர் பகுதியில் அரசுக் கலைக் கல்லூரி தொடங்கவும் நடவடிக்கை எடுப்பேன். திருமழப்பாடியில் ஆரம்ப சுகாதார நிலையம அமைக்கவும், அரியலூர் சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தவும், கீழப்பழூரில் தொழில்பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார் அவர்.

0 comments:

Post a Comment