அரியலூர்: அரியலூரிலிருந்து வைப்பூர் கிராமத்துக்கு புதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்கவிழா நடந்தது. அரியலூரிலிருந்து திருமானூர் பஞ்.,யூனியனுக்குட்பட்ட கடைகோடி கிராமம் வைப்பூருக்கு, கீழப்பழுவூர், கோவிலூர், செட்டிக்குழி, வாண்டராயன்கட்டளை, காமரசவல்லி, குருவாடி வழியாக வைப்பூர் வரை செல்லும் புதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்கவிழா, செட்டிக்குழி மற்றும் காமரசவல்லி கிராமங்களில், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் செல்வக்குமார் தலைமையில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர்கள் கோவிலூர் பன்னீர்செல்வம், காமரசவல்லி சுப்ரமணியன் வரவேற்றனர்.
செட்டிக்குழி கிராமத்தில் உள்ள துவக்கபள்ளி வளாகத்தில் புதிய வழித்தட பஸ் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்த, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி பேசியதாவது: நான் கடந்த 96ம் ஆண்டு எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், மிகவும் பின்தங்கிய நிலையில் குக்கிராமமாக இருந்த இந்த, செட்டிக்குழி கிராமத்தின் சாலை மேம்பாட்டுக்காக, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து தார் சாலை அமைக்க வழிவகை செய்தேன். அதன்பிறகு இந்த கிராமத்துக்கு எல்லா மேம்பாட்டு பணியும் கிடைக்கப்பெற்றது. கோவிலூர் பஞ்சாயத்து தலைவரின் கோரிக்கை படி, இதே வழித்தடத்தில் செட்டிக்குழி வழியாக தஞ்சாவூர் செல்லும் வகையிலும் புதிய வழித்தட பஸ்போக்குவரத்து துவக்க, தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் நேருவை விரைவில் சந்தித்து பேசி ஆவன செய்வேன்.
கடந்த நான்கரை ஆண்டில் அரியலூர் தொகுதியில் உள்ள எல்லா ஊர்களிலும் வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள ஏலாக்குறிச்சியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், அரியலூர் வடக்கு ஒன்றியத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் அமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், அரசு போக்குவரத்து கழகத்தின் அரியலூர் கிளை மேலாளர் ராமநாதன், திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், துணை தலைவர் கென்னடி, ஒன்றியக்குழு தலைவர்கள் உத்ராபதி, ரெங்கராஜ், பஞ்சாயத்து தலைவர்கள் குருவாடி வீரரவி, தூத்தூர் காமராஜ், தி.மு.க., மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜராஜன், அரியலூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் பனங்கூர் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 comments:
Post a Comment