அரியலூர், டிச. 21: அரியலூரில் பசுபதி நினைவு ஹாக்கி கழகம், டாக்டர் எம். அப்துல் சாதிக் நினைவுக் கழகம் ஆகியவை சார்பில் நடைபெறும் மாநில அளவிலான ஹாக்கி போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஹாக்கி கழகத்தின் தலைவரும், பசுபதி நினைவு ஹாக்கி கழகத்தின் தலைவருமான எம். ஞானமூர்த்தி திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அரியலூர் உயர்நிலைப் பள்ளியில் உடல் கல்வி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்த அருணாசலம் (எ) பசுபதி நினைவாக கடந்த 1974 ஆம் ஆண்டு அவரது பெயரைக் கொண்டு ஹாக்கி கழகம் தொடங்கப்பட்டது.
1994 முதல் 2001 ஆம் ஆண்டு வரை பசுபதி நினைவு ஹாக்கி கழகம் சார்பில், மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சில ஆண்டுகள் தொடர்ந்து போட்டிகளை நடத்த முடியவில்லை என்றாலும், தற்போது 9-வது ஆண்டாக மாநில அளவிலான ஹாக்கி போட்டியை நிகழாண்டு நடத்துகிறோம். டிசம்பர் 26 முதல் 30 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெறும்.
இந்தப் போட்டியில் தெற்கு ரயில்வே அணி, தமிழக காவல் துறை அணி, மதுரை திருநகர் ஸ்போர்ட்ஸ் கிளப், பாளையங்கோட்டை ஜோதி ஹாக்கி கிளப், சென்னையிலுள்ள இந்திய உணவுக் கழக அணி, ஐ.சி.எப். அணி, மதுரை ரிசர்வ் லைன் அணி, உடுமலைப்பேட்டை அணி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை அணி, சென்னை இந்தியன் வங்கி அணி, வாடிப்பட்டி எவர்கிரீன் ஹாக்கி கிளப், இந்திய விளையாட்டு ஆணைய அணி, சென்னை பாரத ஸ்டேட் வங்கி அணி, சென்னை ஏ.ஜி.ஓ.எஸ். அணி மற்றும் அரியலூர் பசுபதி நினைவு ஹாக்கி கழக அணி என மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
டிசம்பர் 26 ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நஜ்முல் ஹோதா போட்டியைத் தொடக்கிவைக்கிறார். தினமும் 4 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இறுதிப் போட்டி டிசம்பர் 30 ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. மழை பெய்யும் பட்சத்தில் போட்டிகளை மாற்று இடத்தில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். மேலும், வெளியூர்களிலிருந்து வரும் வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
போட்டி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், பாளை து. அமரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்றார் ஞானமூர்த்தி.
பேட்டியின் போது, போட்டிச் செயலர் வி. யோகநாதன், ஒருங்கிணைப்பாளர் என். பாரதிதாசன், ஹாக்கி கழகச் செயலர் டி. குணசேகரன், ஹாக்கிப் பயிற்சியாளர் என். லெனின்,எஸ். ஜபருல்லா, அரியலூர் மாவட்ட கூடைப்பந்து கழகச் செயலர் சின்னப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்


0 comments:
Post a Comment