Pages

Sunday, December 5, 2010

கணக்கீடு அடிப்படையில் மத்திய அரசு உதவும்

தஞ்சாவூர்: திருவையாறு தியாகபிரம்ம மகோத்சவ சபை உதவி செயலாளர் பருத்திக்குடி மனோகரன் மனைவி இறந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன், மழை பாதித்த பகுதியை பார்வையிட்டார். தஞ்சை மாவட்டம் விளாங்குடி கிருஷ்ணதாஸ் என்பவர் வயலுக்குள் இறங்கி பயிர் சேதத்தை பார்வையிட்ட வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: பல மாவட்டங்களில், குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் விவசாயம், வீடு, குடிசை பாதிக்கப்பட்டுள்ளது. நான்கு லட்சம் ஏக்கர் பயிர் மூழ்கியுள்ளது. நெற்பயிர்கள் பல இடங்களில் நீரால் சூழப்பட்டுள்ளது. தொடர் மழையால் நீர் வடியாமல் உள்ளதால், பயிர்கள் அழுகும் சூழல் உள்ளது.

மேட்டூர் அணை, வீராணம் ஏரி போன்றவை நிரம்பியுள்ளன. தமிழக அரசு தொடர்ந்து நிவாரணம் வழங்கி வருகிறது. மழையால் இறந்தவர்கள், வீடு பாதிப்புக்கு பல நிலைகளில் இழப்பீடு, நிவாரணம் வழங்கப்படுகிறது. மழைநீர் முழுமையாக வடிந்ததும் நெற்பயிர் சேதம், சாலை, ஆறு, வீடு போன்ற குறித்து அரசு கணக்கெடுப்பு செய்யும் என நம்புகிறோம். மழை தொடர்ந்தால் அதை எதிர்கொள்ள அரசு திட்டமிட்டு செயல்பட வேண்டும். இன்றுள்ள நிலையை அரசு கவனித்து வருங்காலங்களில் இதுபோன்ற பாதிப்பை தடுக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

அரசு கணக்கீடு செய்யும் சேதத்தின் அடிப்படையில் மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும். காவிரி பிரச்னையில் மத்திய அரசு மக்களின் நிலையை பிரதிபலிக்கும் வகையில் செயல்படும். தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டியதை பெற்றுத்தர முயலும். தமிழக காங்கிரஸ், இங்குள்ள மக்களின் எண்ணத்தை மத்திய அரசிடமும், காங்கிரஸ் தலைவர்களிடமும் தொடர்ந்து கூறி வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை பெற்றுத்தருவார்கள். தஞ்சை - பெரம்பலூர் ரோடு தேசிய நெடுஞ்சாலையாக்கப்பட்டு, இதனை சீரமைக்க மத்திய அரசு 52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான டெண்டர் மாநில அரசு மூலம் விடப்பட்டபோது, இத்தொகையைவிட கூடுதலாக தொகையை தனியார் நிறுவனங்கள் எதிர்பார்த்ததால் மறுடெண்டர் விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி டில்லி வந்து, நானும் அவரும் சேர்ந்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் கமல்நாத்திடம் இப்பிரச்னை குறித்து பேசி, விரைவில் மறுடெண்டர் விட்டு பணியை துவங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இங்கிருந்து நான் சென்னை செல்லும் வழியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு செல்கிறேன். எங்கள் இயக்கத்தினர் ஆங்காங்கு இதற்காக காத்துள்ளனர்.<BR>இவ்வாறு அவர் கூறினார். விளாங்குடி கிருஷ்ணதாஸ் என்பவரது ஒரு வயலை மட்டும் பார்வையிட்ட மத்திய அமைச்சர் வாசன் பேட்டியளித்தார். முன்னதாக அவரது கார் ரோட்டின் குறுக்கே நிறுத்தப்பட்டதால், பேட்டி, பேட்டியை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு என 30 நிமிடங்களுக்கு மேல் முழுமையாக வாகனங்கள் இரு புறமும் நிறுத்தப்பட்டது.

தஞ்சை - பெரம்பலூர் ரோட்டில் இரு புறமும் நீண்டதூரத்துக்கு வாகனங்கள் நின்றது மக்களை எரிச்சல் அடையச் செய்தது.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ரெங்கசாமி மூப்பனார், சுரேஷ்மூப்பனார், எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., ராம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்

0 comments:

Post a Comment