Pages

Sunday, December 5, 2010

தஞ்சாவூர்- அரியலூர் இடையிலான சாலையை சீரமைக்கக் கோரி மத்திய அமைச்சரிடம் மனு

தஞ்சாவூர்- அரியலூர் இடையிலான சாலையை சீரமைக்கக் கோரி மத்திய அமைச்சரிடம் மனு

First Published : 05 Dec 2010 01:47:23 PM IST


அரியலூர், டிச. 4: மானாமதுரை - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் - அரியலூர் இடையிலான சாலையைச் சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசனிடம் அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி கோரிக்கை மனு அளித்தார்.

   தஞ்சை மாவட்டம், திருவையாறு மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் மழையால் சேதமடைந்த விவசாய நிலங்களை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு, விவரங்களைக் கேட்டறிந்தார்.

   அப்போது, அமைச்சரிடம் அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி அளித்த மனு:

   மானாமதுரை - பெரம்பலூர் சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் தஞ்சாவூர் முதல் அரியலூர் வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

   வாகனங்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையேதான் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.    இந்தச் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணிகள் இதுவரை நடைபெறவில்லை.

   ஏற்கெனவே மோசமாக இருந்த சாலை அண்மையில் பெய்த மழையால் மேலும் மோசமடைந்துவிட்டது. எனவே, உடனடியாக சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அமரமூர்த்தி கூறியிருந்தார்.

   மனுவைப் பெற்றுக் கொண்ட பின்னர், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியது:

   மானாமதுரை - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சை - அரியலூர் இடையேயான சாலையைச் சீரமைக்க ரூ. 52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தப்புள்ளியும் விடப்பட்டது.

   ஆனால், இந்தப் பணியை மேற்கொள்ள தனியார் எடுத்துள்ள ஒப்பந்தப்புள்ளியில் பணிகள் மேற்கொண்டால், அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் இந்தப் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

   சாலையைச் சீரமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கமல்நாத்திடம் எடுத்துரைத்துள்ளோம். எனவே சாலை சீரமைக்கும் பணியில் முழு கவனம் செலுத்தி, விரைவில் பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜி.கே.வாசன்.

   அப்போது, காங்கிரஸ் பிரமுகர் ஜி.ஆர். மூப்பனார், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன், மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, அரியலூர் நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 comments:

Post a Comment