அரியலூர்: "அரியலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்களை காப்பாற்ற, மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்,'என அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி, சென்னையில் முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவில் உள்ளதாவது:
அரியலூர் மாவட்டம், அரியலூர் சட்டசபை தொகுதியில், திருச்சி ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் மூலம், 30 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களை கொண்டதாகும். இந்தாண்டு பாசனத்துக்காக புள்ளம்பாடி வாய்க்காலில் தாமதமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழையால் விவசாய பயிர்கள் பெருமளவு அழிந்து விட்டது. அதையடுத்து மீண்டும் நடவு செய்யப்பட்டுள்ளது. காலம் கடந்து நடவு செய்யப்பட்டதால், பாசனத்துக்கான தண்ணீர் தேவைக்கான காலத்தையும் நீட்டிப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நெல் பயிர்கள் தொண்டை கதிராக இருப்பதாலும், விவசாயத்துக்கான மின்சாரம் நாளொன்றுக்கு 3 மணி நேரம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதனால், மார்ச் மாதம் வரை தண்ணீர் கொடுத்தால் தான், விவசாயிகள் நடவு செய்த பயிரை பாதிப்பு இல்லாமல் அறுவடை செய்ய முடியும். மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், நமக்கு தண்ணீர் கிடைக்கவில்லையே என, விவசாயிகள் மிகவும் வருந்துகின்றனர்.
எனவே, அரியலூர் மாவட்ட நெல் பயிர்களை பாதுகாக்க, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டு, விவசாயிகள் தங்களது வயலில் பயிர் செய்துள்ள வெள்ளாமையை வீட்டுக்கு கொண்டுவந்து சேர்க்க உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.<

0 comments:
Post a Comment