அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கலை அழகுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நாளை (1-ந்தேதி) மாலையில் நடக்கிறது. துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில் கலந்து கொள்ள மு.க.ஸ்டாலின் நாளை மாலை பெரம்பலூர் வழியாக அரியலூருக்கு காரில் வருகிறார். மாவட்ட எல்லையான அரியலூர் ரெயில்வே கேட்டில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
முதலில் அரியலூர் ஒன்றியம் தேளூர் ஊராட்சி மன்னுழியில் சுமார் ரூ.2 1/2 கோடியில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகளை கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
பின்னர் ரூ.1 1/2 கோடியில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையையும், ரூ.13 கோடியில் கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக கட்டிடத்தையும் ரிப்பன் வெட்டி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடைக்கு அவர் வருகிறார்.
தமிழக வருவாய் துறை மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் நடக்கும் விழாவில் கலெக்டர் பொன்னுசாமி வரவேற்று பேசுகிறார். மத்திய மந்திரி நெப்போலியன், தொல்.திருமாவளவன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாளை அமரமூர்த்தி(அரியலூர்), சிவசங்கர் (ஆண்டிமடம்) ராஜேந்திரன் (ஜெயங்கொண்டம்), மாவட்ட ஊராட்சி தலைவர் கொடியரசி துரைசாமி, யூனியன் தலைவர் அருணாபாலு, வாலாஜாநகரம் ஊராட்சி தலைவர் தெய்வ இளையராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிச்சை, மாவட்ட திட்ட அலுவலர், பெல்லா, நாடாளுமன்ற, சட்டன்ற உறுப்பினர்கள், அனைத்து அரசு துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்கியும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கியும், புதிய கட்டிடங்களை திறந்துவைத்து, வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் விழா பேருரை ஆற்றுகிறார்.
தமிழக துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அரியலூர் ரெயில்வே கேட்டில் இருந்து 20 கி.மீ. தூரத்திற்கு வி.கைகாட்டி வரையில் இருபுறமும் கொடிகள், தோரணங்கள், மின்விளக்குகள், கட்-அவுட்டுகள், விளம்பர தட்டிகள் அமைக் கப்பட்டுள்ளது. அரியலூர் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.


0 comments:
Post a Comment