Pages

Saturday, February 19, 2011

திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் மாசிமகத் தேரோட்டம்

திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் மாசிமகத் தேரோட்டம்

 

அரியலூர், பிப். 17: அரியலூர் மாவட்டம், திருமழப்பாடி அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோயில் மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

 

கொள்ளிடத்தின் வடகரையில் புருஷாமிருக மகரிஷியால் பூஜிக்கப் பெற்றதும்,திருமால், இந்திரன் ஆகியோரால் வழிபடப் பெற்றதும், நந்தியெம்பெருமாள் சுயசாம்பிகை தேவியாருடன் திருமணம் கொண்டருளியதும் திருமழப்பாடி அருள்மிகு  வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில்தான்.

 

இந்தத் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 9 ஆம் தேதி  தொடங்கியது.

 

இதைத் தொடர்ந்து, அருள்மிகு வைத்தியநாத சுவாமியும், சுந்தராம்பிகை  அம்மனும், ஆதிசேஷம், பூதம், கைலாசம், இடபம், யானை வாகனங்களில்  சுவாமி, அம்பாள் ஒவ்வொரு நாளும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

 

திருவிழாவின் ஏழாம் திருநாளான பிப்ரவரி 15 ஆம் தேதி திருக்கல்யாண உத்சவமும், எட்டாம் திருநாளான பிப்ரவரி 16 ஆம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா வருதலும் நடைபெற்றன.

 

மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது. இதையொட்டி காலையில் கருவறையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்ட பின்னர், காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். முற்பகல் 11.45 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. நான்கு தேரோடும் வீதிகளின் வழியாக வலம் வந்த திருத்தேர் இரவு நிலைக்கு வந்தடைந்தது.

 

தேரோட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி, திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் மா. நடராஜன், திருமழப்பாடி ஊராட்சித் தலைவர் கர்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மாசிமகப் பெருவிழாவில் வெள்ளிக்கிழமை திருமஞ்சனமும், கொடியிறக்குதலும், பிப். 19 ஆம் தேதி விடையாற்றி உத்சவமும் நடைபெறும்.

 

மாசிமகப் பெருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா. சந்திரசேகரன், நிர்வாக அலுவலர் (கூடுதல் பொறுப்பு) தி. முருகேஷ் மற்றும் கிராமப் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment